ஆதார் அட்டை, குடியுரிமைக்கான சான்றாகாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது, 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் எந்த ஆதார ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், ஆனால் அதற்கு பின்னர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க, பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆதார் என்பது குடியுரிமைக்கான சரியான சான்று அல்ல என்று வாதிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், ஆதார் அட்டை வெறும் அடையாள சான்றாக மட்டுமே கருதப்படும் என்பது உறுதியாகியுள்ளது.