மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு வரவிருந்த ஒரு சிப் உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்திற்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில், மத்திய அரசு ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நான்கு குறைமின் கடத்தி உற்பத்தி ஆலைகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. இதன் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.4,594 கோடி என அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்புதலை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து விரிவான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், "ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலங்கானாவில் விரிவான ஆய்வு செய்த பிறகு, அந்த மாநிலத்தில் ஆலையை அமைக்க விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. ஆனால், அந்த ஆலையை ஆந்திராவில் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 2 குறைமின் கடத்தி உற்பத்தி ஆலைகள் தெலங்கானாவில் அமைக்க முன்மொழியப்பட்டபோது, அவை குஜராத்திற்கு மாற்றப்பட்டன என்றும் தமிழகத்தில் ஆலையை அமைக்க முன்மொழிந்த ஒரு தனியார் நிறுவனத்தை, குஜராத்தில் ஆலையை அமைக்கும்படி நிபந்தனை விதித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாக மத்திய அரசின் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.