உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனையில், ஒரு மருத்துவர் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக, வெறும் 5 ரூபாய் மதிப்புள்ள ஃபெவிக்யிக்கை ஒட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.
சர்தார் ஜஸ்பிந்தர் சிங் என்பவரது மகனுக்கு காயம் ஏற்பட்டபோது, சிகிச்சை அளித்த மருத்துவர் ஃபெவிக்யிக்கை பயன்படுத்தி காயத்தை ஒட்டியுள்ளார். இதனால் குழந்தையின் வலி இரவு முழுவதும் நீடித்ததால், பெற்றோர் லோக்பிரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள மருத்துவர்கள், காயத்தின் மீது இறுகியிருந்த பிசினை நீக்க சுமார் மூன்று மணி நேரம் போராடி, பின்னர் நான்கு தையல்கள் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த அலட்சியமான சிகிச்சையால் நிலைமை மோசமாகியிருக்கலாம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மீரட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் கட்டாரியா இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். மருத்துவ நெறிமுறைகளை மீறிய மருத்துவர் மீது விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.