டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் பணியில் இருந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.கார் மோதிய வேகத்தில் காவலர் சுமார் 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, 100 மீட்டர் தூரத்தில் விழுந்தார்.
சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், வெள்ளை நிற எர்டிகா கார் ஒன்று திடீரென பாதையை மாற்றி, பணியில் இருந்த விபின் குமார் என்ற காவலர் மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு கால்களும் நசுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்தபோது, எர்டிகா கார் மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடன், கார் ஓட்டுநரான வினீத் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காரை கண்டுபிடித்தனர். காரும் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கார் வினீத்தின் சகோதரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.