உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு மற்றும் பல கிரிமினல் வழக்குகளுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த குற்றவாளியான ஷேசாத் என்கிற நிக்கி என்பவர், இன்று அதிகாலையில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.25,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஷேசாத் குறித்து, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மீரட் காவல்துறை ஒரு சிறப்பு படையை அமைத்து, சரூர்பூர் பகுதியில் அவரை சுற்றி வளைத்தது.
"குற்றவாளி சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால், பாலியல் குற்றவாளியான ஷேசாத் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது, அவர் காவல்துறையினரை நோக்கி சுட்டார். உடனடியாக, தற்காப்புக்காக காவல்துறையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஷேசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஷேசாத் மீது இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்குகள் உட்பட, பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.