கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த விபத்து குறித்து அவர் கேட்டறிந்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கரூர் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நிதி உதவி அறிவித்துள்ளார். அதனை அடுத்து தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த சம்பவம் காரணமாக காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு நெருங்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.