சத்தீஸ்கர் மாநிலத்தில், மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகளும் அவருடைய காதலனும், கொலைக்கான சந்தேகத்தை தவிர்க்க, மாமனார் இறந்த பிறகு அவருடைய உடல் முழுவதும் மஞ்சள் பூசியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கீதா என்பவருக்கும் அவருடைய மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, கீதா தனது காதலனுடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்யத் திட்டமிட்டார். சம்பவத்தன்று, மாமனார் நன்றாக குடித்துவிட்டு தூங்கி கொண்டிருந்த நிலையில், அவரது உடலில் இருவரும் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்தனர்.
கொலைக்கு பின், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை மறைப்பதற்காக, உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் பன்னீரை தடவியுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச் சடங்கு செய்யும் போது, பிணத்தில் இருந்த சில காயங்களை கண்ட கிராம மக்கள் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை செய்தபோது, மருமகள் கீதா, மாமனாரை தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரது காதலனும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.