குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் திலீப் என்பவர் காவல் துறையிடம் சரணடைந்துள்ளார்.
திலீப்பும், பெண் உதவி ஆய்வாளர் அருணாவும் லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு அருணாவுக்கும் திலீப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த வாக்குவாதத்தின் முடிவில் திலீப், அருணாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலைக்கு பிறகு, மறுநாள் காலை திலீப் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அதன் பின்னர்தான் காவல் துறை அதிகாரிகள் அருணாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அருணாவுடன் திலீப் தொடர்பு கொண்டதாகவும், அதன் பிறகு இருவரும் லைவ்-இன் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சண்டையில் அருணா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, திலீப் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.