சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல், மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 முதல் 2022 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் பூபேஷ் பாகேல் முதல்வராக இருந்தார். இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,100 கோடி இழப்பு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் சைதன்யா பாகேல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை அவருடைய வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வீட்டை சோதனை செய்ததாகவும், சோதனைக்குப்பின்னர் சைதன்யா கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சைதன்யாவை 5 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சைதன்யாவின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.