மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள முன்னணி வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்த சிவசங்கர் மித்ரா என்பவர், வங்கி கிளையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மித்ரா, பணியிட அழுத்தம் காரணமாக வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அவர் வேலையை ராஜினாமா செய்த நிலையில், நோட்டீஸ் பீரியட் காலத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வங்கி நேரம் முடிந்ததும், அனைத்து ஊழியர்களையும் வெளியே போக சொல்லிவிட்டு, காவலாளியிடம் ஒரு கயிறு வாங்கிட்டு வர சொன்னார். அதன் பிறகு, இரவு 10 மணியளவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு வரை மித்ரா வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி, வங்கி கிளைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து சிவசங்கர் மித்ராவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருடைய தற்கொலை குறிப்பில் பணி அழுத்தமே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் யாரையும் குறிப்பாக குற்றம் சாட்டவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.