டெல்லியில், தனது கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்ட பெண் ஒருவர், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் வசித்து வந்த கரண் தேவ் மற்றும் சுஷ்மிதா தம்பதியினரில், கரண் தேவ் திடீரென மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கரண் தேவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோதுதான், சுஷ்மிதாவுக்கும் அவரது கொழுந்தன் ராகுல் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது என்பதும், அவர்களின் இன்ஸ்டாகிராம் உரையாடல்களே இதற்கு ஆதாரங்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த உரையாடல்களில் கரண் தேவை கொலை செய்வது குறித்து அவர்கள் விவாதித்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் கரண் தேவுக்கு 15 தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும், அதன் பிறகு அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு, அது இயற்கை மரணம் போல நடிக்க முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, சுஷ்மிதாவை கைது செய்த காவல்துறையினர், அவரது கள்ளக்காதலனான ராகுலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.