டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்த உதவுவதாக கூறிய இணைய மோசடி கும்பலின் வலையில் விழுந்து, ரூ. 11.95 லட்சத்தை இழந்தார்.
பிரபல நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாக தொலைபேசியில் அழைத்த மோசடிக்காரர்கள், அந்த பெண்ணின் ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்ற உதவுவதாக நம்ப வைத்தனர். இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி-யை அவர் அவர்களிடம் பகிர்ந்துள்ளார். ஓடிபி-யை பெற்ற சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 11.95 லட்சம் திருடப்பட்டது.
உடனடியாகப் புகார் அளித்ததன்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
வங்கி அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து நடைபெறும் இத்தகைய மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.