அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் OTP பெறுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தங்கமாரி என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சேவைகள் அனைத்தும் பயனர்களின் மொபைல் எண்ணில் இருந்து ஓடிபி பெறுவதாகவும், இதன் மூலம் தனிப்பட்டவர்களின் தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் பகிரப்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, மொபைல் எண் மூலம் ஓடிபி பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "ஓடிபி மூலம் மக்களின் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்று பொதுவாக கூற முடியாது. இன்றைய காலகட்டத்தில், ஓடிபி இல்லாமல் எந்த ஆன்லைன் சேவையையும் மேற்கொள்ள முடியாது. அனைத்து வகையான ஓடிபிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தனர்.
மேலும், "தரவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு ஓடிபி பெறுகின்றன. யுபிஐ பணப் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட், உணவு ஆர்டர், வாடகை கார் போன்றவற்றுக்கு ஓடிபி பெறுவதற்கு தடை விதிக்க முடியாது" என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.