மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களிடையே அடிதடி சண்டை ஏற்பட்டதாகவும், சட்டமன்றத்திற்குள் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற வளாகத்தில் பாஜக எம்எல்ஏ கோபிசந்த் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவின் கார் கதவு அவர் மீது பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் சட்டமன்றத்திற்குள் வந்தபோது பெரும் சண்டையாக மாறியது. இருதரப்பு ஆதரவாளர்களும் கைகலப்பில் மோதிக்கொண்டனர்.
இது குறித்து ஒரு எம்எல்ஏ கூறுகையில், "சட்டமன்றத்திற்குள் குண்டர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை" என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நடந்த சம்பவம் குறித்து சபாநாயகர் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், "குண்டர்கள் சட்டமன்றத்திற்குள் வருகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பாஸ் கொடுத்தது யார்? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை இதுதான்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.