முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து இன்று காலமான நிலையில் அவருடைய உடல், தற்போது கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதிக்கு 1948 ஆம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. ஒரு காலகட்டத்தில், தனது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து, இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், திமுகவின் மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.முத்துவின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது கோபாலபுரம் இல்லத்திற்கு முக முத்துவின் உடல் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.