மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறக்கும்போதே இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஈமச்சடங்குகளுக்கு தயாராகி கொண்டிருந்தபோது திடீரென உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏழாம் தேதி, பாலிகா குகே என்ற பெண் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை பெற்ற நிலையில், அந்த குழந்தை பிறந்த உடனே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் குகே மற்றும் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டு இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து, திடீரென குழந்தை அடக்கம் செய்வதற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, கை கால்களை அசைத்தது. இதை அந்த குழந்தையின் பாட்டி பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மருத்துவர்கள் "குழந்தை உயிருடன் தான் இருக்கிறது" என்று தெரிவித்ததை பார்த்து குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குழந்தையை துணியால் சுற்றி வைத்திருந்தபோது, கடைசியாக குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும் என்று பாட்டி ஆசைப்பட்டதாகவும், அப்போதுதான் குழந்தை அசைவதை அவர் பார்த்து உயிருடன் இருப்பதை எங்களிடம் சொன்னதாகவும் பாலிகா குகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தை உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் உறவினர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..