புனேவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பான சமூக ஊடகப் பதிவு காரணமாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மஹாராஷ்டிர அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது .
நாட்டின் நலனுக்கு எதிராக அவருடைய பதிவு இருந்ததால் தான் அவரை கைது செய்தோம்" என அரசு வழக்கறிஞர் தெரிவித்ததற்கு பதிலளித்த நீதிமன்றம், "ஒரு மாணவியின் பதிவு காரணமாக தேசிய நலனே பாதிக்கப்பட்டுவிடுமா? அவர் தான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். மாணவர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த கூடாதா?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "இந்தவிதமான கடுமையான நடவடிக்கைகள், மாணவிகளை மேலும் தீவிரமாக மாற்றும். இவரை கைது செய்வதன் மூலம் நீங்கள் அவரை ஒரு குற்றவாளியாக மாற்றிவிட்டீர்கள்," என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாணவியின் வழக்கறிஞர் ஃபர்ஹானா ஷா, ஜாமீன் மனு தாக்கல் செய்யும் படியாக நீதிமன்றம் அறிவுறுத்தியது. "தேர்வுகளை எழுத விட வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் எழுத சொல்லக்கூடாது. இவர் குற்றவாளி இல்லை," என்றும் நீதிபதிகள் கூறினர்.
எஞ்சினியரிங்கில் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" பற்றி பதிவிட்டிருந்தார். அதை இரண்டு மணி நேரத்தில் நீக்கியும், மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.