காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், விதல் என்றும், அவர் ஒரு வாடகை கார் ஓட்டுநர் என்றும் தெரியவந்துள்ளது. குடிபோதைக்கு அடிமையான விதல், ஏற்கெனவே மூன்று முறை திருமணம் செய்தவர். அவரது 4வது மனைவி வனஜாஷி. அதேபோல, வனஜாக்ஷிக்கும் இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
விதல் தொடர்ந்து குடித்துவிட்டு தொல்லை கொடுத்ததால், வனஜாக்ஷி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில், அவருக்கு கர்நாடக ரக்ஷனா வேதிகா அமைப்பைச் சேர்ந்த மாரியப்பா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, மாரியப்பா மற்றும் ஒரு ஓட்டுநருடன் வனஜாக்ஷி கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, விதல் அவர்களை பின்தொடர்ந்துள்ளார். ஒரு சிக்னலில், காரை வழிமறித்து உள்ளே பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதனால் பெட்ரோல் வனஜாக்ஷி, மாரியப்பா மற்றும் ஓட்டுநர் மீது தெறித்துள்ளது. மாரியப்பாவும், ஓட்டுநரும் காரைவிட்டு தப்பித்த நிலையில், விதல் வனஜாக்ஷியை விரட்டி சென்று அவர் மீது மேலும் பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் தீ வைத்துள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனஜாக்ஷி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினர், தீக்காயங்களுடன் இருந்த விதலை, 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க, உறுதியான சட்டப் பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.