தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே, 27 வயதான கவின் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் இருந்ததால், அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள், சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தவெக இதற்கான ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.