வரதட்சணை கொடுமையால் சமீபகாலமாக அதிக மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் 27 வயதான ஒரு பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட பெண், ஷில்பா என்பவர் ஐ.டி. நிறுவனமான இன்போசிஸில் பணியாற்றியவர். இவருக்கும், முன்னாள் மென்பொருள் பணியாளரான பிரவீனுக்கும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும், ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு பிரவீன் குடும்பத்தினர் ரூ.15 லட்சம் ரொக்கம், 150 கிராம் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளனர். இவை அனைத்தையும் பூர்த்தி செய்தபோதிலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கூடுதல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கேட்டு ஷில்பாவை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் திடீரென ஷில்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மின்விசிறி யாரும் எளிதில் எட்ட முடியாத உயரத்தில் இருந்ததால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என ஷில்பா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், வரதட்சணைக் கொடுமையால் நடந்ததாக கூறப்படும் மற்றொரு சோகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.