மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் உரையாடி, போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து, சசிகாந்த் செந்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தொலைபேசியில் சசிகாந்த் செந்திலுடன் பேசி, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பா.ஜ.க அரசுக்கு எதிராக இன்னும் பல போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் சசிகாந்த் செந்திலின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.