ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்ட முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Facial Recognition System) மூலம் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இந்த முக அடையாளம் காணும் அமைப்பு (Facial Recognition System) மூலம், அனந்த்நாக் காவல்துறையினர் ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கைது செய்யப்பட்ட அந்த நபர், உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. முக அடையாளம் காணும் அமைப்பு மூலம் சந்தேகப்பட்ட பிறகு, அதிகாரிகள் அவரை உடனடியாகக் காவலில் எடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ச்சியான விசாரணையின் அவரது பெயர் ஷேக் என்பதும், அவர் ஏற்கனவே வெடிபொருள் சட்டம் மற்றும் உபா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் பல பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்யலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.