கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அவனி மற்றும் தம்போலியை சேர்ந்த ஷரோன் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை நண்பகலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்காக அலங்காரம் செய்ய சென்ற மணமகள் அவனி, அதிகாலையில் கார் விபத்தில் சிக்கி முதுகுத்தண்டில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையிலிருந்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
விபத்து ஏற்பட்ட நிலையிலும், திட்டமிட்ட சுப நேரத்தில் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் உறுதியாக இருந்தனர். மருத்துவர்களின் அனுமதியுடன், மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவிலேயே திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், சிகிச்சை பெற்று வந்த அவனி கழுத்தில் மணமகன் ஷரோன் தாலிகட்டினார். விபத்தையும் தாண்டி, அன்பும் உறுதிமொழியும் வென்ற இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. காயமடைந்த அவனிக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.