சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள கருமந்துறை கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திரனுக்கும், அவருடைய பக்கத்து தோட்டத்தில் வசித்து வந்த உறவினர்களான ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு ராஜேந்திரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். உடலில் குண்டுகள் பாய்ந்ததால், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலை குறித்துத் தகவல் அறிந்த கல்வராயன் மலை கரியக்கோயில் மற்றும் கருமந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக சந்தேகிக்கப்படும் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் கல்வராயன் மலைப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.