● இந்தியாவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக மார்பகங்களை அகற்றியவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே மார்பக மறுசீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். கலாசார கட்டுப்பாடுகள், பொருளாதாரக் காரணங்கள், விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றின் காரணமாக 99 சதவீதம் பேர் அந்த சிகிச்சைகளை புறக்கணித்து விடுகின்றனர்.
● மார்பக மறுசீரமைப்பு சிகிச்சைகள் அழகியலுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய ஒன்று என தவறாக கருதுகின்றனர். உண்மையில், அது உடல் குறைபாட்டுக்கு தீர்வளிக்கும் அத்தியாவசிய சிகிச்சை.
● நோயாளியின் உடலில் உள்ள திசுக்கள் மூலமாகவே மார்பக மறு சீரமைப்பு செய்யும் நுண்}அறுவை சிகிச்சைகள் (Microsurgical reconstruction) 99%}க்கும் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த சிகிச்சை இயற்கையில் அமைந்த மார்பகத்தை மீட்டெடுப்பதுடன் மட்டுமல்லாது தன்னம்பிக்கையையும் மேம்படுத்துகிறது.
சென்னை மார்பக மையம் சார்பில் 'மார்பகப் புற்றுநோயைக் கடந்து: வாழ்க்கையை மீட்டெடுத்தல்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச மார்பக மறுசீரமைப்பு தினத்தில் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயை வென்ற 100}க்கும் மேற்பட்ட போராளிகள் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மார்பக மறுசீரமைப்பு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
சென்னை மார்பக மையத்தின் மூத்த ஆலோசகரும், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் மற்றும் முதுநிலை மருத்துவ ஆலோசகரும், புற்றுநோய் ஒட்டுறுப்பு (ஆன்கோபிளாஸ்டிக்) மார்பக அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தாங்கள் கடந்து வந்த பயணங்களையும், அனுபவங்களையும் நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர். மார்பகப் புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை குறித்த காணொலி விளக்கப் படங்களும் ஒளிபரப்பட்டன.
மார்பக நீக்க அறுவை சிகிச்சைக்கு (Mastectomy) பிறகு இழந்த இடத்தில் அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்கு செயற்கை உபகரணங்களை (Implants) பயன்படுத்தலாம். இல்லையெனில், நோயாளியின் வயிறு, முதுகு அல்லது தொடைப் பகுதிகளிலிருந்து திசுக்களை எடுத்து மார்பகங்களை மறுசீரமைப்பு செய்யலாம்.
உலக மார்பக மறுசீரமைப்பு நாள் (BRA Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15}ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.
புற்றுநோய்க்குள்ளாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பே உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2022}ஆம் ஆண்டில் மட்டும் 1,92,020 பேருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 60% க்கும் அதிகமானோர் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலேயே பாதிப்பை கண்டறிகின்றனர்.
அந்த தருணத்தில் மார்பகங்களை முழுமையாக நீக்கும் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. அந்த சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு இழந்த மார்பகங்களை மீண்டும் மறுசீரமைத்துக் கொள்ள 99 சதவீத பெண்கள் முன்வருதில்லை.
கலாசார ரீதியான கட்டுப்பாடுகளும், பொருளாதார சிக்கல்களுமே அதற்கு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் இந்த சூழல் இல்லை. அங்கு ஏறத்தாழ 65% க்கும் அதிகமான பெண்கள் மார்பக மறுசீரமைப்பு சிகிச்சைகளை விருப்பத்துடன் மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில், மார்பகப் புற்றுநோய்க்குள்ளாகும் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களது மார்பகங்களை மட்டும் இழப்பதில்லை. மாறாக, தன்னம்பிக்கையும், சுய மதிப்பையும் சேர்த்தே இழக்கின்றனர். அந்த இழப்பை இத்தகைய மறு சீரமைப்பு சிகிச்சைகளால் ஈடு செய்ய முடியும்.
மார்பகப் புற்றுநோய் சிகிச்சையுடன் சீரமைப்பு சிகிச்சையும் ஒருங்கிணைப்பதே இதற்கு சிறந்த தீர்வு. இதன் மூலம் நோயைக் கண்டறிவது முதல் குணமடைவது வரை ஒருங்கிணைந்த சிகிச்சையைப் பெற முடியும். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சீரமைப்பு நிபுணர்களுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் அதிக திறமையான மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க இயலும்.
அதேபோன்று மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையை ஒரு அழகியல் (aesthetic) நடைமுறையாகப் பார்க்காமல், மருத்துவச் சிகிச்சையாகக் கருதி காப்பீடு வழங்குவதும் அவசியம். மேலும், பரிசோதனை, அறுவை சிகிச்சை, சீரமைப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒருங்கிணைந்த மையங்களை நிறுவுவது சிகிச்சையை எளிதாகவும், மலிவாகவும் மாற்றும்.
டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா கூறுகையில், தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான பட வழிகாட்டுதல் (இமேஜிங்) ஆகியவை தொடக்கநிலையிலேயே நோயைக் கண்டறிவதை சாத்தியமாக்கியுள்ளன. இதன் பயனாக பல பெண்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில், மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு உடனடியாகச் சீரமைப்புச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இல்லை. இதன் விளைவாக, புற்றுநோயிலிருந்து மீண்டாலும், உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த உளைச்சலுடன் வாழ நேரிடுகிறது. புற்றுநோய் சிகிச்சையுடன் சீரமைப்பு சிகிச்சையை ஒருங்கிணைப்பது அவசியம் என்பதையே அது உணர்த்துகிறது” என்று கூறினார்.
டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் பேசுகையில், “மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை நுட்பங்கள் மகத்தான முன்னேற்றத்தை எட்டியுள்ளன. நோயாளியின் திசுக்களைப் பயன்படுத்தியே மறு சீரமைப்பு செய்ய முடியும். இதற்கு கூடுதலாக இரண்டு மணி நேரம் மட்டுமே செலவிட வேண்டியிருக்கும். அனுபவமும், ஆற்றலும் நிறைந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் சீரமைப்பு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும்போது அதன் வெற்றி விகிதம் 99% க்கும் மேல் உள்ளது. அதுமட்டுமல்லாது சில தருணங்களில், மார்பக நீக்கம் மற்றும் சீரமைப்பு சிகிச்சைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்போது, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கதிரியக்கச் சிகிச்சைக்கான தேவையும் குறைகிறது.
சீரமைப்பு சிகிச்சைகளுக்காக வயிற்றுப் பகுதியில் உள்ள திசுக்களைப் பயன்படுத்துவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் இதில் நிறைந்திருப்பது குறித்த விழிப்புணர்வு மேம்பட்டால் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களுக்கு ஆக்கப்பூர்வமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.