பல்வேறு காரணங்களால் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லியில் பட்டாசுகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் குளிர் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிறது. மக்கள் வெளியவே செல்ல முடியாத அளவு புகைமூட்டம் ஆகிவிடுகிறது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லியில் வாகனம் இயக்குவது முதல் பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தீபாவளிக்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் கூட தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த தடையை விலக்கக்கோரி மத்திய அரசு, டெல்லி அரசு, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். டெல்லி மக்களும் முழுமையான தீபாவளியை கொண்டாட வழி செய்ய வேண்டும் என அதில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் டெல்லியில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. பண்டிகை காலங்களில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்காக தடைகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் அதேசமயம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் டெல்லி அரசால் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K