திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காவது நாளான இன்று காலை, ஸ்ரீனிவாச பெருமாள் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6:30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, மற்றும் அரசு பள்ளி மைதானங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் அவசர உதவிக்கு 112 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.