தென்கரையில் உள்ள பாடல் பெற்ற 117-வது தலமான திருநெல்லிக்கா, சரும நோய் நிவாரண தலமாக போற்றப்படுகிறது. இங்குள்ள இறைவன் நெல்லிவன நாதேசுவரர் ஆவார்.
தேவலோகத்து ஐந்து மரங்கள் சாபம் பெற்று பூமியில் நெல்லி மரங்களாக மாறியபோது, அந்த மரங்களின் பெருமையை உணர்த்த ஈசன் அதன் அடியில் சுயம்புலிங்கமாக தோன்றினார். இதனால் இவர் நெல்லிவனநாதர் ஆனார். இத்தலத்து அம்பிகை மங்களநாயகி ஆவார்.
இக்கோயிலில் மூலவர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் மாசி மாதங்களில் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படும் சூரிய பூஜை நடைபெறுவது சிறப்பு.
இத்தலத்தில் ரோக நிவாரண தீர்த்தம் உட்பட ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. கந்தர்வன் ஒருவன் இந்த குளத்தில் நீராடி தனது குஷ்ட நோயை நீக்கி கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. எனவே, இந்தத் தீர்த்தத்தில் நீராடி நெல்லிவன நாதேசுவரரை வணங்கினால், சரும நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது பதிகம் பாடியுள்ளார்.