ஒரு காலத்தில், வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சோப்பைப் பயன்படுத்துவது சாதாரணமாக இருந்தது. ஆனால், தற்போது சரும ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பெருகியிருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி சோப்புகளை பயன்படுத்துவது அவசியமாகியுள்ளது.
வெவ்வேறு சரும வகைகளை கொண்டவர்கள் ஒரே சோப்பை பயன்படுத்தும்போது, நன்மையை விட தீமைகளே அதிகம். சோப்பை பயன்படுத்தியபின், அதன் மீது படிந்திருக்கும் நுரையை அலசாமல் விட்டுவிடும்போது, சோப்பு கட்டியில் ஈரப்பதம் தங்கி, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் வளர சாதகமான சூழலை உருவாக்கும். ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போது, இந்த கிருமிகள் எளிதில் பரவி, சரும நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, உடலில் காயம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அல்லது எக்ஸிமா போன்ற சருமப் பிரச்சனை உள்ளவர்களிடமிருந்து கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.
ஒரு சோப்பை பலர் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயன்படுத்திய பின் சோப்பை நன்கு கழுவி, உலர விட வேண்டும். கணவன்-மனைவி கூட இதே முறையை பின்பற்ற வேண்டும்.
தற்போது கடைகளில் கிடைக்கும் திரவ சோப்புகள் தொற்று அபாயத்தை தவிர்க்க சிறந்த மாற்று ஆகும்.