திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவின் கொடியேற்ற நிகழ்வு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று, ஆந்திர மாநில அரசு சார்பில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்குப் பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்க இருக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் ஒன்பது நாட்களிலும் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகளில் ஏழுமலையான் தனது வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்வாக, செப்டம்பர் 28-ஆம் தேதி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக ஏழுமலையான் தங்கக் கருட வாகனத்தில் வீதி உலா வரவுள்ளார். நிறைவு நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, கோவில் புஷ்கரணி குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதை தவிர்த்து, அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலிகிரி சோதனைச் சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.