மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா, நேற்று சூரசம்ஹாரத்துடன் முக்கியத்துவம் பெற்றது. ஆறு நாட்கள் விரதம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி வழிபாடு நடத்தினர்.
விழாவின் நிறைவு நாளான இன்று காலை 8 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத் தேரில் எழுந்தருளினார். விரதம் இருந்த பக்தர்களின் பங்கேற்புடன், ரத வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்து காப்புகளை களைந்தனர். தொடர்ந்து, கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மயிலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பிற்பகல் 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, 108 படி அரிசியில் தயிர் சாதம் படைக்கப்பட்டு, விசேஷமான பாவாடை தரிசனம் நடைபெறுகிறது. அன்றிரவு, சுவாமி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.