ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி, 6 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், புது டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்று நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து வெளியான காணொளிகளில் ஒரு பெண் செய்தியாளரும் இல்லாதது, சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், "பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் அனைவரும், தங்கள் பெண் சகாக்களுக்கு ஆதரவாக சந்திப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
சர்வதேச அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலிபான் அரசின் அமைச்சரின் இந்த பயணத்தின்போது, இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வணிகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும் என்றும், வளர்ச்சித் திட்டப் பணிகளைப் புதுப்பிக்கப்படும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.