ஈரோடு மாவட்டம், பாலம்பாளையம் அருகே உள்ள பாலகிரி மலையில் வீற்றிருக்கும் முருகன், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் ஒரு பாலகனின் கனவில் தோன்றி, தனது இருப்பிடத்தை காட்டியதாக நம்பப்படுகிறது. ஊர் மக்கள் தேடியபோது, மலையின் உச்சியில் சுயம்பு வடிவிலான முருகனின் சிலை கிடைத்தது. இதுவே பக்தர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
இந்த கோயிலில், மூலவரான அழகிய முருகன் சிலைக்கு முன்னால், முதலில் கண்டெடுக்கப்பட்ட சுயம்பு வடிவ முருகனையும் தரிசிக்கலாம். கோயில் அடிவாரத்தில் விநாயகர் அருள்பாலிக்க, மலைப் பாதை அமைக்கப்பட்டபின் வாகனங்கள் செல்லவும் மண் பாதை உள்ளது.
பக்தர்களின் சங்கடங்கள் தீரவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், ஆறு வளர்பிறை சஷ்டி நாள்களில் முருகனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், பங்குனி உத்திரத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும்.
தினமும் ஒரு கால பூஜை நடைபெறும் இக்கோயில், அந்தியூர் அருகில் பாலம்பாளையத்தில் அமைந்துள்ளது.