தமிழ் மாதங்களில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் அதன் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. சூரியனும் சந்திரனும் கடக ராசியில் இணையும் ஆடி அமாவாசையில், மறைந்த நம் பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது அவசியம்.
இந்த தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது போன்றவை புண்ணியத்தைச் சேர்த்து, பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை திதி ஜூலை 24, 2025 அன்று அதிகாலை 03.06 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 01.48 வரை நீடிக்கிறது. இத்தினத்தில் காலை ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடித் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகு காலம், எமகண்டம் பார்க்க தேவையில்லை. மதிய வேளை தர்ப்பணம் கொடுக்க மிகவும் உகந்தது. கோத்திரம், குலதெய்வம், தந்தை மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லித் தர்ப்பணம் செய்வது அவசியம்.
அமாவாசையன்று முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிப்பது மகா விஷ்ணுவை மகிழ்வித்து, பித்ருக்களுக்கு ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் சந்ததியினரை வாழ்த்துவார்கள். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்றுவதும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படையலிடுவதும், கோதுமைத் தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்குவதும் சிறந்தது. தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை தினசரி பூஜைகளைத் தொடரலாம். இதன் மூலம் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.