பிகார் மாநிலம் கயா, ஒரு புனித நகரமாக கருதப்படுகிறது. இந்நகரத்தின் பெயர் இப்போது அதிகாரப்பூர்வமாக "கயா ஜி" என்று மாற்றப்படுவதாக பிகார் அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் முதன்மைச் செயலர் சித்தார்த் கூறியதாவது, “உள்நாட்டு மக்களின் ஆன்மிக உணர்வுகள் மற்றும் நகரத்தின் பண்டைய மரபை மதிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது” என்றார்.
கயா நகரம், ஃபல்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்கிய புனித இடமாகும். ஆண்டுதோறும், முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். இந்த நகரத்தில் விஷ்ணுபத் கோயில், மங்கள கௌரி, ராம் ஷில்லா, பிரம்மயோனி போன்ற முக்கிய ஆன்மிக இடங்கள் உள்ளன.
மேலும், புத்த மதத்தின் முக்கிய புனித நிலமான புத்தகயா இங்கு தான் அமைந்துள்ளது. கௌதம புத்தர் இங்கேதான் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இந்த பெயர் மாற்ற முடிவை, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த புதிய பெயர், நகரத்தின் ஆன்மிகத் தழுவலை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.