30 வயதுக்கு மேல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி 20 போட்டிகளில் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணிக்குக் கேப்டனாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார் சூர்யகுமார். அவர் தலைமையில் இந்திய டி 20 அணி மிகச்சிறப்பாக ஆடி வருகிறது.
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி தொடரை வென்றது. அடுத்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பை மற்றும் 2028 ஆம் அண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும்தான் தற்போது தன்னுடையக் கவனம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவரால் அந்த ஃபார்மட்டுகளுக்கு ஏற்ப தகவமைத்து ஆடமுடியவில்லை. அதற்கு அவரது டி 20 பேட்டிங் அணுகுமுறை கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்நிலையில் அவர் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் “ஏபி நீங்கள் நான் இப்போது பேசுவதைக் கேட்டால் சீக்கிரம் என்னோடு தொடர்பில் வாருங்கள். அடுத்த சில ஆண்டுகள் எனக்கு முக்கியமானவை. நான் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆட விரும்புகிறேன். என்னால் டி 20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு இடையில் சமநிலையைப் பேணமுடியவில்லை. நீங்கள் எப்படி இரண்டு ஃபார்மட்டிலும் சிறந்து விளங்கினீர்கள்” எனப் பேசியுள்ளார்.