நேற்று முன் தினம் நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி 163 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க, அடுத்து ஆடிய பெங்களூர் அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அப்போது க்ருனாள் பாண்டியாவோடு இணைந்து நிதானமாக ஆட்டத்தைக் கட்டமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் கோலி. இந்தப் போட்டியில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதையடுத்து சிலர் கோலி மந்தமாக விளையாடியதாகவும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்தும் விமர்சனம் வைத்தனர்.
இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் சேவாக் “உங்கள் அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையே இல்லை. கோலியின் இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று. அவர் இறுதிவரை ஆடுவதை உறுதி செய்து, க்ருனாள் பாண்ட்யாவுக்கு நம்பிக்கை அளித்ததன் காரணமாகவே அவரால் சிறப்பாக விளையாட முடிந்தது” எனக் கூறியுள்ளார்.