நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம்.
ஐபிஎல் ஏலத்தில் அவர் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட போதே கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றார். இந்நிலையில் தற்போது இந்த அசகாய இன்னிங்ஸ் மூலம் தான் அதிர்ஷ்டத்தால் இந்த வாய்ப்பைப் பெறவில்லை என்று காட்டியுள்ளார். நேற்று அவர் எதிர்கொண்ட பவுலர்களில் பலர் அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர்கள்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்றப் பின்னர் பேசிய அவர், “இது ஒரு சிறந்த உணர்வு. என்னுடைய முதல் ஐபிஎல் சதம், என்னுடைய மூன்றாவது இன்னிங்ஸில் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நான் செய்த பயிற்சியின் விளைவு இன்று தெரிந்துள்ளது. நான் மைதானத்தைப் பார்க்காமல் பந்தைப் பார்த்து அடித்து ஆடுகிறேன். எனக்குப் பவுலர்களைப் பார்த்து பயமில்லை. நான் அதிகமாக சிந்திப்பதில்லை. நான் இப்போது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.