இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சி எஸ் கே அணி, மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சென்னை அணி விரைவாக வீழ்த்திய போதும் நிதீஷ் ராணாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. இதையடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் சி எஸ் கே அணிக் கேப்டன் பேசும்போது “கடந்த சீசன்களில் எங்கள் அணியில் மிடில் ஆர்டரைப் பலப்படுத்த ரஹானே மற்றும் ராயுடு ஆகியோர் இருந்தார்கள். அதனால் இந்த சீசனில் அந்த பொறுப்பை ஏற்க நான் என் பேட்டிங் வரிசையைக் கீழிறக்கிக் கொண்டேன். ஆனால் இரண்டு போட்டிகளில் நான் மூன்றாவது ஓவரிலேயேக் களமிறங்க வேண்டியதாகிவிட்டது. எங்கள் தொடக்க ஜோடியினர் சிறப்பாக ஆடும் போது இன்னும் வலுவாக மாறுவோம்” எனக் கூறியுள்ளார்.