ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்களை குவித்த நிலையில், சேஸிங் சென்ற சிஎஸ்கே 176 ரன்களே எடுத்து வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சென்னை அணி விரைவாக வீழ்த்திய போதும் நிதீஷ் ராணாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.
இந்த தோல்வி குறித்து போட்டிக்கு பின் பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் “நிதீஷ் ராணா பவர்ப்ளேயில் ஸ்கொயர் திசைக்குப் பின்னால்தான் அடிப்பார் என்று தெரிந்தும் நாங்கள் அதனைத் தடுக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை. அவரை நேராக விளையாட வைத்திருக்க வேண்டும். மோசமான ஃபீல்டிங்கால் சில ரன்களைக் கொடுத்தோம். அதையும் தடுத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.