மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இனி நடத்தப்படாது என ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்தது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஐசிசி அதிகாரிகளின் கூட்டத்தில் இனி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு பதிலாக இப்போது 2021 ஆம் ஆண்டில் 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மூத்த அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, 50 ஓவர் உலக கோப்பை போட்டி போன்றே இருக்கிறது. 50 ஓவர் வடிவிலான போட்டிக்கு ஒரு உலக கோப்பை இருக்கும் போது சாம்பியன்ஸ் கோப்பை தேவையா?
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.