கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை எதிர்க்கொண்டிருக்கும் சூழலில் கொரோனா தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைகளில் இருந்து தப்பி ஓடுவது கிலியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் தங்களால் ஆன மட்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வருக்கு வந்த ஒரு அயர்லாந்து பயணிக்கு கொரோனா தொற்று இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால் அவரையும், அவரது நண்பரையும் புவனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டில் மருத்துவர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும்போதே சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து எகிறி குதித்து ஓடியுள்ளனர் அந்த பயணிகள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பயணிகளை தேடி வருகின்றனர்.
இதேபோல பஞ்சாப் வந்த நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் அவரை ரத்த பரிசோதனை செய்ய அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் அவரும் மருத்துவமனையை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதுபோன்ற தப்பி ஓடும் சம்பவங்களால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர். கொரோனா வைரஸ் குறித்த பயமும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.