உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வேகமாக செயல்பட உலக நாடுகளை சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட பின் சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. இதனால் சீனாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் பல அலட்சியம் காட்டுவதாய் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ”கொரோனா வைரஸ் ஒன்றும் பயிற்சி அல்ல. விட்டுக்கொடுக்கவும், மன்னிப்பு கேட்கவும் இது சமயம் அல்ல. அனைத்து தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டும். உலக நாடுகள் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள பல ஆண்டுகளாக திட்டங்களை வகுத்துள்ளன. அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.