Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே நாளில் 28 பேர் பாதிப்பு, முகக்கவசம் வாங்கத் துடிக்கும் மக்கள்

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே நாளில் 28 பேர் பாதிப்பு, முகக்கவசம் வாங்கத் துடிக்கும் மக்கள்
, வெள்ளி, 6 மார்ச் 2020 (22:04 IST)
கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே நாளில் 28 பேர் பாதிப்பு, முகக்கவசம் வாங்கத் துடிக்கும் மக்கள்

மலேசியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) ஒரே நாளில் மட்டும் புதிதாக 28 பேருக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த நான்கைந்து தினங்களாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மலேசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட 28 புதிய நபர்களையும் சேர்த்து மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் மலேசியர்கள் என்றும், 15 பேர் சீனக் குடிமக்கள் என்றும், அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
"பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் 956 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
 
"இவர்களில் 258 பேர் 26ஆவது நோயாளியாக அடையாளம் காணப்பட்டவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் ஆவர். இவர்களுள் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 70 பேருக்கு பாதிப்பில்லை என்றாலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 170 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை," என்று சுகாதார அமைச்சின் பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 
எனினும் மலேசியாவில் கிருமித் தொற்று பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கிறது என்றும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தால் அதை உடனுக்குடன் அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
"கொரோனா கிருமி இன, மத, அரசியல் எல்லைகளை மதிக்காது"
 
இதற்கிடையே, கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தை அனைவரும் இணைந்து நடத்த வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர்களான டாக்டர் சுல்கிஃப்ளி அஹமத்தும், டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் தெரிவித்துள்ளனர்.
 
'கோவிட்-19' நோயானது இனம், மதம், அரசியல் எல்லைகளுக்கு எந்த வகையிலும் மரியாதை கொடுக்காது என்றும் இருவரும் எச்சரித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நித்யானந்தாவின் சீடர் வீடியோ வெளியிட்டு தற்கொலை...