இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா ஆயுத உதவி செய்ததாக வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் அதில் பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் சீன ஆயுதங்களையே பயன்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் 80 சதவீதம் சீனத் தயாரிப்புகள்தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் போர் தொடங்கியபோது பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா ஒய்-20 என்ற விமானம் முழுக்க ஆயுதங்களை ஏற்றி பாகிஸ்தானுக்கு அனுப்பி ஆயுத உதவி செய்ததாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவலை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து சீன மக்கள் விடுதலைப்படை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்களை அனுப்பியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் ஆசியாவில் சீனா அமைதியையே விரும்புவதாகவும், இரு நாடுகள் இடையேயான சண்டையில் சீனா சண்டை நிறுத்தத்திற்கான ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K