அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி விசா ரத்து நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதன்மையாக, மது போதையில் வாகனம் ஓட்டுதல், குற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் சட்ட விதிகளை மீறுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களை குறிவைத்தும் இந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக, அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அதிகரித்து வந்தன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள், தங்களது விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அங்குப் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா விதிகளை மீறும் எந்தவொரு செயலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த விசா ரத்து சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.