பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு 2023 ஆம் ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. அந்த ஆண்டில் அவர் நடித்த பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகின. ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் அடுத்து கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க முக்கிய வேடங்களில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் ஆகியோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மருத்துவர்கள் ஷாருக் கானை ஓய்வு எடுக்க சொல்லி வலியுறுத்தியுள்ளதால் கிங் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டு அதன் ரிலீஸ் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக் கான் எக்ஸ் தளத்தில் இரசிகர்களோடு உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் “உங்களுக்கு வயதாகிவிட்டது. அதனால் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக நீங்கள் ஓய்வெடுப்பது பற்றி யோசியுங்கள்” எனக் குறும்புத்தனமாக அட்வைஸ் பண்ண அவருக்கு ஷாருக் கான் தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார். அதில் “ப்ரோ, உங்கள் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் முடிந்ததும் நல்ல கேள்வியாக கேளுங்கள். அதுவரை நீங்கள் தற்காலிக ஓய்வெடுப்பது பற்றி சிந்தியுங்கள்” என பதிலளித்துள்ள்ளார்.