இந்திய வெளியுறவுத் துறை "அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், பெல்லேடியம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது, நாங்கள் ஏன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக் கூடாது?" என்று எழுப்பிய கேள்வி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடச் செய்தது.
செய்தியாளர் ஒருவர், "ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம் இறக்குமதி செய்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும்" என்று டிரம்ப் பதில் அளித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் சீனாவுக்கு 100% வரி விதிப்பீர்களா என்ற கேள்விக்கு, "இன்னும் எவ்வளவு சதவீதம் வரி விதிப்பது என்பதை நான் முடிவு செய்யவில்லை. விரைவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவில்லை என்றால் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். ஆனால், இந்தியாவின் இந்த இறக்குமதி நடவடிக்கை இந்தியாவின் நலன் சார்ந்தது என கூறி, அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அஞ்சவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்று உறுதியாகக் கூறியது.
இந்தியாவின் இந்த கேள்வி மற்றும் உறுதியான நிலைப்பாட்டால் குழப்பமடைந்த டிரம்ப், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.