இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான டி 20 போன்ற விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் உயிரைக் கொடுத்து பந்துவீசிய சிராஜ் 9 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து வீரர்களே பாராட்டு வார்த்தைகளால் மகுடம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடைசி நாளில் புதுப்பந்து எடுப்பதற்காக நேரம் வந்தபோதும் ஏன் அதை செய்யாமல் பழைய பந்திலேயே வீசினீர்கள் என்ற கேள்விக்கு சிராஜ் அளித்துள்ள பதில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “பழைய பந்தால் என்னால் என்ன செய்ய முடியும் என்று சிலருக்குக் காட்ட விரும்பினேன்” எனப் பதிலளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது அவரால் பழைய பந்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என அப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.