ரஷ்யாவில் படித்து வந்த தமிழக மாணவர் கட்டாயப்படுத்தி உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து மருத்துவ படிப்புகளுக்காக பல்வேறு மாணவர்கள் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறாக கடலூரை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர் ரஷ்யாவில் மருத்துவப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 21ம் தேதி கிஷோர் தனது குடும்பத்திற்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் உக்ரைனுக்கு எதிரான போரில் தன்னை கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்க ரஷ்யா முயல்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுகுறித்து கிஷோரின் குடும்பத்தினர் கூறும்போது, தங்கள் மகன் மீது திட்டமிட்டு பழி சுமத்தி, உக்ரைன் போரில் பலிகடாவாக்க முயல்வதாகவும், இந்திய அரசு இதில் தலையிட்டு தங்களது மகனை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று பிரதமர் மோடியை சந்தித்து 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அளித்துள்ளார். அதில் இந்திய அரசு, மாணவர் கிஷோர் விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து கடினமான சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
கிஷோரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு, இந்த வாரத்தில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K